Friday, August 7, 2009

அயல் நாட்டு அகதிகள்


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்


பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல்
Happy newyear, Happy pongal, என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கைய்யாலாகாதவர்கள்


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை
கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது


தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்


உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறைவிருந்தாலும்
first class என்று சொல்லியே பலகிப்போனவர்கள்
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க


கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
கலைத்துதான் போகிறோம்.


எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்


திறைக்கடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்


எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!


ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுகே தெறியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கிம்றோம்!இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது.


நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை!வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டைஈடு கிடைக்காத நஷ்டம் இது
யாருக்காக!எதற்க்காக!! ஏன்!!!


தந்தையின் கடன்,தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு
சொந்தமாய் வீடு,குழந்தையின் எதிர்காலம்,குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.